நம்முடைய உடல்நலத்தின் வீழ்ச்சியும், நவீன மருத்துவமும்🧘

Last week, I read an informative article and thought of sharing it just for sharing is caring. So here it goes,

#Copied

உணவே விஷமாகும் போது…

நம்முடைய உடல்நலத்தின் வீழ்ச்சியுடன் நவீனத்துக்கு ஒரு மாமன் மச்சான் தொடர்புள்ளது.

நாற்பது வயது மாரடைப்புகள், பரவலாகும் புற்றுநோய், குழந்தைகளை பிறப்பில் இருந்தே தோன்றி ஓராண்டில் வெளிப்படும் உளமுடக்க பிணிக்கூட்டு போன்ற நோய்கள் ஒரு நாட்டில் அதிகமாகி வருவதற்கும் அந்நாடு எந்தளவுக்கு அதிக வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கும் சம்மந்தம் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளிலே மிக அதிகமாக மெட்டோபொலிக் நோய்களும் வலுத்து வருவதைக் காண்கிறோம். இதற்கு ஒரு முக்கிய காரணம் மனிதர்கள் எப்போது, எதை உண்ண வேண்டும் எனும் முடிவெடுக்கும் திறனை அரசும் சமூகமும் முழுக்க முழுக்க சந்தைப் பொருளாதாரத்திடம் ஒப்படைத்து விட்டதே.
நான் நேற்று ஒரு மேகி நூடுல்ஸ் விளம்பரம் பார்த்தேன். அதில் மல்டிகிரெயின் நூடுல்ஸ், காய்கறிகள் என கண்கட்டி வித்தை காட்டி குழந்தைகளுக்கு அதிக நார்ச்சத்து வேண்டுமா, அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டுமா நூடுல்ஸ் சாப்பிடுங்க எனக் கேட்கிறார்கள். ஒரு அறிவுள்ள சமூகம், ஒரு பொறுப்பான அரசு இதை அனுமதிக்கலாமா? நூடுல்ஸின் பிரச்சினையே அதில் உள்ள சுவை மேம்பாட்டு வேதியப் பொருட்களும், வாடிக்கையாளருக்கு அடிமையாக்கும் தன்மையும், அவை நம் உடலுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளுமே. நீங்கள் சிறிது நல்ல தானியங்களையும், 10 கிராம் உலர வைத்த காய்கறிகளையும் சேர்த்தால் அது ஆரோக்கிய உணவாகி விடுமா? அதே போலத்தான் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலையும் ஆரோக்கியமானது என்று கூறி விற்கிறார்கள். நாம் போகும் இடமெல்லாம் இத்தகைய உணவுகளே நிறைந்திருக்கின்றன என்பதால் குழந்தைகள் சுலபத்தில் இவற்றுக்கு அடிமையாகி விடுகிறார்கள். நான் நேற்று என்னுடைய காலில் அணிகிற காலிப்பர் எனும் கருவியை செய்வதற்காக மொபிலிட்டி இந்தியா எனும் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு உளமுடக்கு நோய்கொண்ட பிள்ளைகளை (மனவளர்ச்சி குன்றினவர்கள் என அறியப்படுகிறவர்கள்) அதிகமாக நான் காண்பதுண்டு. நேற்று பார்த்தால் கும்பல் கும்பலாக அவர்கள் இருக்க பெற்றோர் அவர்களுக்கு மதிய உணவை ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சரி என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் பர்கர், சிப்ஸ் போன்ற மோசமான உணவுகள். பெற்றோரும் ஆளுக்கு ஒரு சிப்ஸ் பாக்கெட்டுடன் திரிகிறார்கள். இதைப் பார்க்கையில் என் மனதில் எழுந்த முதல் எண்ணமே தம் நோய்க்கு காரணமான ஒன்றையே நோய் வந்த பின்னரும் பயன்படுத்துகிறார்களே என்பதுதான்.

உளமுடக்கு நோய்கள் மரபியல் ரீதியாக ஏற்படுகின்றன என்று கூறப்பட்டாலும் இப்போது ஆய்வாளர்கள் நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் (gut microbiome) இந்நோய்களுக்கும் ஒரு முக்கியமான தொடர்புள்ளதாக நிரூபித்து வருகிறார்கள். Down-Syndrome-Related Maternal Dysbiosis Might Be Triggered by Certain Classes of Antibiotics: A New Insight into the Possible Pathomechanisms எனும் கட்டுரை இணையத்தில் கிடைக்கிறது. Gábor Ternák, Gergely Márovics, Katalin Sümegi உள்ளிட்ட அறுவர் செய்த இந்த ஆய்வில் கருவுற்ற தாய்மார் உட்கொள்ளும் எதிர்-உயிர்மி (ஆண்டிபயோட்டிக்) மருந்துகளால் குடல் கிருமிகளின் உலகம் முழுக்க உருமாறுவதாலே குரோமோசோம் 21இல் முப்பிரி மாற்றம் – கருமுட்டை, கரு, செல்கள் உருவாகும் போது – நிகழ்ந்து அதனால் 95% குழந்தைகளின் நரம்பணுக்களில் கோளாறு வந்து இந்நோய்கள் வருகின்றன எனத் தெரிய வந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது எதிர்-உயிர்மிகளின் தாக்கம் அல்ல, மாறாக நம்மை இத்தகைய நோய்கள் வராமல் பாதுகாப்பது குடல் நுண்ணுயிர்கள் எனும் தகவலே.

நம் உடலுக்கென்று இருப்பவை 23,000 மரபணுக்கள் என்றால், நம் குடல் நுண்ணுயிர்கள் கொண்டுள்ள மரபணுக்கள் சராசரியாக 30 லட்சம். இந்த 30 லட்சம் மரபணுக்களே – அதாவது வாடகையாக நாம் வாங்கி பயன்படுத்தும் மரபணுக்கள் – மனித உடல் சீராக செயல்பட பிரதான காரணம். இந்த நுண்ணுயிர்களில் பலவகை உண்டு. இவற்றின் வகைமைகளைப் பொறுத்தே நமது உடலின் இயக்கமும் உருமாறுகிறது. மோசமான குடல் நுண்ணுயிர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடலாம். அவை அதிகமாக ஆக வெடிகுண்டு தாக்குதல்களான நோய்களும் அதிகமாகும். ஒரு தேசத்தின் மொத்தமாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குப் போவதைப் போன்றதுதான் மோசமான குடல் நுண்ணுயிர்கள் மிகவும் அதிகமாகி அவற்றின் மரபணுக்களின் அடிப்படையில் நம் உடல் இயங்குவது. குடல்-மூளை அச்சு என ஒரு கோட்பாடு மருத்துவத்தில் உண்டு. இது குடலின் நுண்ணுயிர்களுக்கும் மூளைக்குமான பரிவர்த்தனையின் அடிப்படையில் எப்படி பல மாற்றங்கள் உடலிலும் மூளை, நரம்பணு மண்டலத்திலும் நிகழ்கின்றன என்று விவாதிக்கிறது. இதன்படி மனச்சோர்வு, மன அழுத்தம் துவங்கி பார்க்கின்ஸன், ஆட்டிஸம் போன்ற நோய்கள் வரை இந்த குடல்-மூளை அச்சில் வரும் சீர்கேட்டினால் ஏற்படுவன. ஒரு எளிய உதாரணம் சொல்வதானால் பயம் வரும்போது அடிவயிறு கலங்கும், மலம் கழியும், சிறுநீர் பிரியும். மோசமான உணவுகளை உண்டு வயிறு உப்பினால் தூக்கம் மோசமாகி கொடுங்கனவுகள் வரும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலோ உடலும் அமைதியாக இருக்கும். நமது மனநிலை சிறப்பாகவும் அமையும்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மலத்தை ஆராயும் போது அதில் Clostridia,
Desulfovibrio, Sutterella, மற்றும் Bacteroidetes ஆகிய மோசமான நுண்ணுயிர்கள் அதிகமாகவும், Firmicutes, Prevotella, மற்றும் Bifidobacteria ஆகிய நல்ல நுண்ணுயிர்கள் குறைவாக உள்ளதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த மோசமான நுண்ணுயிர்கள் உடல்பருமனும் வேறு பல மெட்டோபீலிக் நோய்த்தொகுப்பு கொண்டோரின் குடலில் காணப்படுபவையே.

ஆக இதற்கும் அவர்களுடைய நோய்க்கும் ஏதோ ஒரு கவனிக்கத்தக்க தொடர்பு உள்ளது. ஒன்று தாய் உட்கொண்ட எதிர்-உயிர்மி மருந்துகளால் அவர்களுடைய குடல் நுண்ணுயிர்க் கூட்டத்திற்கு ஏற்பட்ட சீர்குலைவு (dysbiosis) அவர்கள் கருவுறும் போது குழந்தையின் உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாலோ அல்லது குழந்தையின் நுண்ணுயிர்க் கூட்டம் பிறப்பிலேயே மோசமாக உள்ளதாலோ இம்மாதிரி மனவளர்ச்சி சம்மந்தமான நோய்கள் வர வேண்டும். அல்லது சிசேரியன் மூலமாகப் பிறப்பதாலும் தாய்ப்பால் கிடைக்காமல் இருப்பதாலும் தாயின் ஆரோக்கியமான நுண்ணுயிர்க் கூட்டம் குழந்தைக்கு கிடைக்காமல் போவதால் நிகழ வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இன்றைய கணிசமான மக்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் இல்லை, அவர்களே பலவீனமான உடல்நலத்துடன் இருக்கிறார்கள் எனும் போது இயற்கையாக பிரசவித்தாலும் குழந்தைக்கு அதனால் பெரும் பயன் இருக்குமா எனத் தெரியவில்லை. ஓரளவுக்கு பரவாயில்லாத நிலையில் உள்ள நுண்ணுயிர்க் கூட்டத்தை குழந்தை பெறுவதற்குப் பதில் எதிர்-உயிர்மி மருந்துகளால் முற்றிலும் சீர்குலைந்த நுண்ணுயிர் கூட்டத்தைப் பெறுவது கேடானது எனும் அளவுக்கு இதைப் புரிந்து கொள்ளலாம். எது எப்படியோ நாம் உண்ணும் உணவுக்கும் மருந்துகளுக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனவளர்ச்சியின்மைக்கும் ஒரு மறுக்க முடியாத தொடர்பு உள்ளது.

இந்த எதிர்-உயிர்மி மருந்துகளான பெனிசிலின், டெட்டிரா சைக்கிளின் ஆகியவை எந்த நாடுகளில் எல்லாம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் நீரிழிவு, தண்டுவட மரப்பு நோய், மார்பக, குடல் புற்றுநோய்கள் அதிகமாகத் தோன்றுவதாக டெர்னாக் எனும் ஆய்வாளர் தனது A New Discovery எனும் நூலில் குறிப்பிடுகிறார். ஏனென்றால் எதிர்-உயிர்மி மருந்துகள் நம் உடலுக்குள் சென்றதும் முதல் வேலையாக நம் குடலின் நல்ல நுண்ணுயிர்க் கூட்டத்தை கூண்டோடு அழித்துவிடும். அதனாலே மருத்துவர்கள் எதிர்-உயிர்மிகளை பரிந்துரைத்ததும் கூடவே தயிர் உள்ளிட்ட புரோபயோட்டிக் உணவுகளையும் சாப்பிட சொல்கிறார்கள் (இது ஒரு நாட்டை குண்டு போட்டு அழித்துவிட்டு கூடவே அங்கு ஜனநாயகத்தையும் அமெரிக்கா நிறுவுவதைப் போன்றது.) இங்கு மற்றொரு தகவலையும் குறிப்பிட வேண்டும் – கேஸி, கேண்டனி, பின்கெட் ஆகியோர் செய்த ஆய்வில் எலிகளின் உடம்புக்குள் குடல் நாளம் வழியாக எதிர்-உயிர்மி மருந்துகளை செலுத்தும் போது autoimmune encephalitis நோய் வருகிறது, ஆனால் இதே மருந்தை நேரடியாக உடலில் செலுத்தும் போது வருவதில்லை என்று கண்டுபிடிக்கிறார்கள். அதாவது இம்மருந்துகள் குடலின் நல்ல நுண்ணுயிர்க் கூட்டத்தை சீரழிப்பதே சில நோய்கள் வருவதற்கு காரணம்.

குரோமோமில் வரும் முப்பிரி மாற்றமே 95% டவுன் சிண்டிரோம் போன்ற மனவளர்ச்சியின்மை நோய்களுக்கு காரணம் எனும் போது இது தாய்மாரிடம் இருந்தே 90% தோன்றுகிறது, ஆண்கள் வழியாக 10% வருகிறது என்று கோப்படெ எனும் ஆய்வாளர் தெரிவிக்கிறார். பொதுவாக பெண்கள் 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது மனவளர்ச்சியின்மை நோய் குழந்தைக்கு வரக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் கருவளர்ச்சியின் போது போலேட் எனும் உயிர்ச்சத்தை உற்பத்தி செய்வதை தடை பண்ணும் மரபணு ஒன்றின் செயல்பாடே நோய்த்தோற்றத்தின் துவக்கம். இது ஏன் உற்பத்தியாவதில்லை என்றால் அதற்கு பெண்கள் புகைப்பிடிப்பது மற்றொரு காரணம் என்று கருதப்படுகிறது. இந்த உயிர்ச்சத்துக்களின் சுரப்புக்கு பிரதான காரணிகள் குடலின் நுண்ணுயிர்கள் எனும் போது இச்சித்திரம் தெளிவாகிறது. உ.தா., மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்ற தாய்மாரின் மலத்தை சோதித்த போது அவர்களுடைய குடலில் Clostridiaceae மற்றும் Pasteurellaceae எனும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் மிகுதியாக இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். சொர்போனி, பத்தோருஸோ உள்ளிட்ட ஆய்வாளர்களின் ஆய்வுகள் ஆட்டிஸ நோய் கொண்ட குழந்தைகளுக்கு புரோபயோட்டிக் உணவுகள் அளிக்கும் போது அவர்களுடைய நோய்க்கூறுகள் குறைவதாகவும் கண்டடைந்திருக்கிறார்கள்.

இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது தாய்மாரின் வயதும், மரபணுக்களையும் விட அவர்கள் மோசமான உணவுப்பழக்கத்தாலும், (பெரும்பாலும் அதன் விளைவால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட) எதிர்-உயிர்மி மருந்துகளாலும், புகைப்பழக்கத்தாலும் அவர்களுடைய குடல் நுண்ணுயிர்கள் நாசமானதாலே (dysbiosis) ஆட்டிஸம் போன்ற நோய்கள் இப்பிள்ளைகளுக்கு வருகிறது. ஆனால் இப்போதும் தம் பிள்ளைகளின் மனவளர்ச்சியின்மைக்கு துரதிஷ்டமும் முன் ஜென்ம பாவமுமே காரணம் என நினைத்தபடி இப்பிள்ளைகளுக்கு நோயை ஏற்படுத்திய அதே மோசமான உணவுகளைக் கொடுத்து, பெற்றோரும் அதையே தொடர்ந்து தாமும் உண்கிறார்கள் என்றால் இந்த அபத்தத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இன்று இப்பிள்ளைகள் மதிய உணவாக சிப்ஸையும் கேக்கையும் தின்பதைக் கண்ட போது உண்மையில் எனக்கு ரத்தம் கொதித்தது. ஆனால் இவர்களும் என்ன செய்ய முடியும்? ஒரு ஆஸ்பத்திரியில் அவர்களுக்குப் பசிக்கிறது என்றால் கேண்டீனில் இத்தகைய உணவுகளே கிடைக்கின்றன, வெளியே எங்கு திரும்பினாலும் இதே நோய் ஏற்படுத்தும் உணவுகளே கிடைக்கின்றன என்றால் அவர்கள் என்னதான் பண்ணுவார்கள்? இப்படி உணவுச்சந்தைக்காக குழந்தைகளை பலிகொடுக்கும் ஒரு சமூகத்தையும் அரசையும் நாம் செருப்பால் அடிக்க வேண்டாமா?

ஆங்கில மருத்துவர்களிடம் ஒரு கேள்வி?.. நான் இதை ஆங்கில மருத்துவர்களை விமர்சிப்பதற்காக கேட்கவில்லை. இது ஒரு எளிய சந்தேகம் மட்டுமே. சில உடற்பிரச்சினைகளுக்கு எளிய வீட்டுத்தீர்வுகள் இருக்கையில் ஏன் ஆங்கில மருத்துவர்கள் விலைமதிப்பான களிம்பு, மாத்திரைகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தக் கோருகிறார்கள்?

தோலில் வரும் பூஞ்சான் தொற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் அதற்கு வேப்பெண்ணெய் மிகச்சிறந்த உடனடி தீர்வு. ஆனால் எந்த ஆங்கில மருத்துவரும் அதைப் பரிந்துரைத்து நான் கண்டதில்லை. உடனடியாக சில மாத்திரைகள், களிம்புகள் என ஆயிரம் ரூபாயாவது நம்மை செலவு பண்ண வைத்துவிடுவார்கள். இதே போலத்தான் உணவு ஒவ்வாமையால் வரும் நுரையீரல் பிரச்சினைகள்.
என்னுடைய மாணவர் ஒருவருக்கு அவர் உண்ட ஓட்டல் உணவினால் மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. மருத்துவர் நிறைய ஸ்டிராய்ட்ஸ் மற்றும் மாரில் ஊசிகளையே பரிந்துரைத்தார். அவருக்கு இன்னும் பிரச்சினை முழுக்க சரியாகவில்லை, ஏனென்றால் அவரது உணவு மற்றும் வாழ்வு முறைகளை மாற்றுமாறு மருத்துவர் வலியுறுத்தவில்லை. என்னுடைய தோழி ஒருவருக்கு தொண்டையிலும் நுரையீரலிலும் பிரச்சினை ஏற்பட்டு தொடர் இருமல் வந்துகொண்டே இருந்தது. சிறப்பு மருத்துவரிடம் போனால் மருந்து, மாத்திரை, கட்டணம் என மூவாயிரத்துக்கு மேல் செலவானது. ஆனால் குணமாகவில்லை. சில வாரங்கள் ஏகப்பட்ட மாத்திரைகளை முழுங்கி விட்டு இருமி இருமி தொண்டை வலி ஏற்பட்டதுதான் மிச்சம். நான் இது ஒவ்வாமையால் ஏற்படுகிறது எனக் கருதி என்னென்ன உணவு ஒவ்வாமைகள் இருக்கக் கூடும் என ஒரு பட்டியலிட்டு அவர் அதிகமாக எடுத்துக் கொண்டு பால் மற்றும் பால் உணவுகளை தவிர்க்க சொன்னேன். பாலை நிறுத்தியதும் மூன்றே நாட்களில் இருமல் குறைந்து ஒரு வாரத்தில் முழுக்க குணமாகிவிட்டார். இப்போதும் அவர் பால் உட்கொள்ளும் போது இப்பிரச்சினை வரும், நிறுத்தினால் போய்விடும். என்னுடைய ஐயம் இந்த மிக மிக எளிய தீர்வை ஏன் ஒரு மருத்துவர் பரிந்துரைப்பதில்லை?

அடுத்தது ஒரு மிகப்பெரிய பிரச்சினை – உணவு மற்றும் வாழ்வு முறைகளால் ஏற்படும் நீரிழிவு, ரத்தக்கொழுப்பு உள்ளிட்ட கோளாறுகள். இதைப் பற்றி சற்று விரிவாகவே சொல்கிறேன். வாழ்வுமுறை கோளாறுகளுக்கு சிறந்த தீர்வு நோய்க்காரணத்தை மாற்றுவதுதானே, ஆனால் ஏன் ஆங்கில மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பதில்லை? அவர்கள் ஏன் மாவுச்சத்தை 90% குறைத்து, அதிகமாக காய்கறியும், நொதிக்க வைத்த உணவுகளும் சாப்பிட்டு, விரதம் இருக்கும்படி கேட்பதில்லை? எனக்கு இளமையிலேயே நீரிழிவு வந்துவிட்டது. அப்போது மருத்துவர் எனக்குக் கொடுத்த உணவுத்திட்டம் இன்னும் நினைவிருக்கிறது. காலையில் இட்லி – சட்னி/ சப்பாத்தி-பருப்பு, 11 மணிக்கு மேரி பிஸ்கட், மதியம் சோறு / சப்பாத்தி + சிறிது காய்கறி, மாலையில் மீண்டும் மேரி பிஸ்கட், இரவில் சப்பாத்தியும் பருப்பும். அது போதாதென்று உறங்கும் முன்பு பாலும் கூட இருக்கிறது. இது மிக மோசமான உணவுத்திட்டம் என்பது இன்று நிரூபணமாகி இருக்கிறது. ஏனென்றால் இது முழுக்க மாவுச்சத்தால் ஆனது. இது தொடர்ச்சியாக நம் உடலில் இன்சுலின் தேவையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. கொழுப்பு எரியவோ செல்கள் தம்மை சரி பண்ணிக்கொள்ளவோ விடாமல் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்கிறோம். இந்த உணவுமுறையில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தோ நொதிக்க வைக்கப்பட்ட உணவோ இல்லை. நமது வாழ்வுமுறை கோளாறுகள் நமது குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் சாவதால் ஏற்படுகின்றன. இந்த உணவுத்திட்டம் அக்கிருமிகளை மேலும் கொன்றுவிடும். அப்போது நமது நோய்கள் இன்னும் பலமடங்கு பெருகும். மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்குப் போய் காவலிருக்கத் தேவைப்படும். என்ன கொடுமை என்றால் கடந்த இரு பத்தாண்டுகளாக இன்றும் பல நோயாளிகளுக்கு இதே உணவுமுறையைத் தான் பரிந்துரைக்கிறார்கள். அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன பிரச்சினை என்றால் இந்த உணவுமுறையைப் பின்பற்றினால் நோயின் தாக்கம் குறையாது, மெல்ல மெல்ல கூடிக்கொண்டே போகும். முதலில் 30 யூனிட் இன்சுலின் எடுக்கிறவர் பத்தே ஆண்டுகளில் 200 யூனிட்டுகள் எடுக்கத் தேவை வரும். அதோடு வேறு பல நோய்களும் வந்து அவர் தளர்ந்து போய்விடுவார்.

நான் கடந்த 8 ஆண்டுகளில் இதையுணர்ந்து கொண்டேன் – உடலும், அதில் உள்ள குடல் நுண்ணுயிர்களுமே சிறந்த மருத்துவர்கள். அடிக்கடி சாப்பிட்டு உடலுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் விட்டால், குடல் நுண்ணுயிர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்தால் உடல் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு விடும். இதை உணர்ந்து கொண்ட நான் என் உணவுத்திட்டத்தை முழுக்க மாற்றினேன். ஒரு பெரிய கிண்ணத்தில் காய்கறிகள் உண்டேன். நொதிக்க வைக்கப்பட்ட உணவை தவறாமல் எடுத்துக் கொண்டேன். முக்கியமாக 18 மணிநேர விரதம் இருக்கப் பழகினேன். இப்போது நீரிழிவை மிக மிக சுலபமாக என்னால் கையாள முடிகிறது. நான் முன்பு நாள் ஒன்றுக்கு 160 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றால் இப்போது 20 யூனிட்டுகள் தான். 1921இல் இன்சுலினை கண்டுபிடிக்கும் முன்பு மருத்துவர்கள் இதே உணவுமுறையைக் கொண்டுதான் நோயாளிகளை சுலபத்தில் சமாளித்து உயிருடன் வைத்திருந்தார்கள். ஆனால் இன்சுலின் வந்த பிறகு மருத்துவர்கள் இந்த இரண்டு முறைகளையும் கலந்து ஆரோக்கியமான முறையை உருவாக்காமல் அதிக இன்சுலின் / மாத்திரை பயன்பாட்டைக் கோருகிற மோசமான வாழ்வு-உணவு முறையை பரிந்துரைக்கிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சிறுவயதில் இருந்தே வலிப்பு வந்து துயரப்படும் தன் மகளுக்கு விரதமும், காய்கறிகளையும் கொண்ட அப்பிரச்சினையை வெகுவாக குறைத்துவிட்டதாக சொன்னார். இத்தனைக்கும் அவர் ஒரு ஆய்வாளர். அமெரிக்காவிலும் இம்முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. ஆனால் ஆங்கில மருத்துவர்களோ பொதுவாக இம்முறையை பரிந்துரைக்காமல் நேரெதிராகவே செய்யச்சொல்லி நோயை இன்னும் மோசமாக்குவார்கள். நமது ஊரில் பெருகி வரும் மனநோய்களுக்கும் இந்த மாவுச்சத்து குறைவான, நார்ச்சத்து அதிகமான, நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளும், விரதமுமும் உள்ளடக்கிய வாழ்க்கைமுறையும் உதவும் என பல ஆய்வுகள் சொல்லுகின்றன. Nature இதழில் வந்த இவ்வாய்வுக் கட்டுரையைப் பாருங்கள் (Impact of fasting on stress systems and depressive symptoms in patients with major depressive disorder: a cross-sectional study.) ஏன் மனநல மருத்துவர்கள் மாத்திரைகளுடன் இதையும் பரிந்துரைப்பதில்லை?

இன்று நமது நவீன உணவுமுறை பற்றி எவ்வளவோ ஆய்வுகள் வந்துவிட்டன. நவீன உணவுமுறை மிகவும் தவறானது, ஒருவர் 6 வேளைகள் உண்ணவேண்டிய தேவையில்லை, ஒன்றிரண்டு வேளைகளே போதும், நமது உடலின் அமைப்பு அதற்கு ஏற்பவே இயற்கையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நிரூபித்து வருகிறார்கள். ஆனால் நம் கல்வியமைப்போ மருத்துவமோ இதை ஏன் மக்களுக்கு எடுத்து சொல்வதில்லை? ஏன் ஒரு எளிய தீர்வு நம் கைவசம் இருக்கையில் அதைவிட்டு விட்டு சிக்கலான மருந்துகள், மருந்துகளுக்கு மேல் மருந்துகள், நோயின் அடிப்படை காரணங்களை மேலும் வலுப்படுத்தி, நோயாளிகளை மருத்துவமனைக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் நிரந்தர அடிமையாக்குகிறார்கள்?

“இந்த காலை உணவையும் நொறுக்குத்தீனியையும் நிறுத்திவிட்டு மதிய உணவுடன் ஆரம்பியுங்கள்” என்று நீங்கள் சொன்னாலே பல வாழ்வுமுறை நோய்கள் குறையுமே! நாற்பதுகளில் இத்தனை பேர் மாரடைப்பு வந்து சாவது குறையுமே! மன அழுத்தம் ஏற்படும் அளவு குறைந்து மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே! நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? யார் உங்கள் கையையும் வாயையும் கட்டி வைத்திருக்கிறார்கள்?

ஏன் மூலிகை மருந்துகளையும் உங்கள் மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்த நீங்கள் கேட்பதில்லை?
கர்நாடகாவில் ஒரு வர்ம வைத்தியர் இருக்கிறார். கடும் உடல்வலியுடன் போகிறவர்கள் ஒரு சின்ன அழுத்து அழுத்தி ஒரு நிமிடத்தில் சரி பன்ணிவிடுவார். ஆனால் எந்த எலும்பு மருத்துவரும் தன் நோயாளிகளை இவரிடம் அனுப்ப மாட்டார்கள். நிறைய வலிநிவாரணிகளும், ஓய்வும் அல்லாவிடில் அறுவை சிகிச்சையுமே பரிந்துரைப்பார்கள். ஒரு எளிய சிக்கனமான தீர்வு அருகில் இருக்கையில் அதையும் பயன்படுத்தி உங்கள் நோயாளிகளின் துயரத்தை பாதி குறைக்கலாமே. ஏன் மரபும் நவீனமும் கலந்த ஒரு புதிய மருத்துவமுறை தோன்றவில்லை? நோயாளிகளை ஏன் இங்கும் அங்குமாக அல்லாட வைக்கிறீர்கள்? என்ன தயக்கம்?

பிரச்சினை உங்கள் படிப்பிலா அல்லது மருத்துவமனை, மருந்து உற்பத்தியாளர்களின் அழுத்தங்களிலா? பொருளாதார நிர்பந்தங்களிலா?

Courtesy, Abilash Chandran

– Manimozhi Ilango

Leave a comment